இந்த தொடர் பதிவின் நோக்கம், தமிழ் திரை இசையை பற்றிய ஒரு தவறான குற்றசாட்டு அடிக்கடி இணையத்திலும் பல நிகழ்வுகளிலும் சொல்லப்படு, 50 மற்றும் 60 களுக்கு பிறகு 70களில் தமிழ் திரை இசை ஹிந்தி பாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டன என்பதாகும். அதையும் தாண்டி 70களில் தமிழ் திரை இசை ஒரு தேக்கத்தை கண்டது என்றும் பின்னர் 70களில் இறுதியில் நிகழ்ந்த ஒரு இசை புரட்சி மட்டுமே இதை மீட்டெடுத்தது. இந்த தவறான குற்றச்சாட்டை பலர் தொடர்ந்து உரக்க கூறி வருகின்றினார். ஆனால் உண்மையாக 70களின் பாடல்கள் எப்படி இருந்தன என்று பார்த்தால் , நாம் ஏற்கனவே 70 மற்றும் 71ஆம் வருடங்களை பார்த்ததில் திரை இசை நன்றாகவே ஆரோக்கியமாகவே துடிப்புடனும் இருந்து இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி அந்த இரு வருடங்களை கடந்து 72 முதல் 75 பார்த்தால் வியப்பே ஏற்படுகிறது. எப்படி இந்த குற்றசாட்டை அதுவும் ஆதாரம் இல்லாமல் கூறி வருகின்றனர் என்று. எத்தனை எத்தனை பொன்னான பாடல்கள் இந்த கால கட்டத்தில்.
இதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ இல்லை. ஒரு தவறான பரப்புரை செய்யும் போது அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து அக்கால கட்டத்தில் வந்த பாடல்களை கேட்க செய்வதன் மூலம் இவ்வாறான தவறான பரப்புரைகள் பரவுவதை கொஞ்சம் தடுக்க முயலலாம்.
இந்த பதிவில் 1972 ஆண்டை இரண்டு பதிவுகளாக பார்க்கலாம்.
இந்த ஆண்டு இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ் அவர்களுக்கு ஒரு இனிய திருப்பத்தை தந்தது. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்தனர்.இரண்டு இசை கோர்ப்புகளும் பாடல்களும் .மிகுந்த வரவேற்பை பெற்று அந்த ஆண்டின் சிறந்த பாடல்களின் இடத்தை பிடித்தன.
தெலுங்கிலிருந்து மொழி மாற்றப்பட்டு வந்த 'நான் ஏன் பிறந்தேன்'. கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளில் வந்த 'சித்திரச் சோலைகளே' அருமையான பாடல் மற்றும் வாலி அவர்களின் வரிகளில் வந்த மற்றுமொரு அற்புதமான பாடல் 'வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை'...நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்..இந்த பாடல் காட்சி அமைப்பும் மிக அருமையாக கையாளப்பட்டு இருக்கும். இன்றும் இவ்விரும் பாடல்களும் பிரபலமாக உள்ளன.'தலை வாழை இலை போற்று' 'தம்பிக்கு ஒரு பாட்டு' 'உனது விழியில் எனது பார்வை உலகை' என்ற பிற பாடல்களும் மிகவும் ரசிக்கப்பட்டன.
பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக
தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்
பின்னர் எழுத்தாளர் மணியன் அவர்களின் தயாரிப்பில் வந்த 'இதய வீணை' படத்தின் பாடல்களும் ரசிகர்கள் இடையே பிரபலம் ஆனது. 'பொன் அந்தி மாலை பொழுது' எனும் அருமையான துள்ளிசை பாடலாகட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழகத்தை சார்ந்த மக்களவை உறுப்பினர் மூலமாக, மக்களவையில் ஒலித்த 'காஷ்மீர் பியூடிபியுல் காஷ்மீர்' என்ற பாடலாகட்டும், இரட்டையர்களின் திறமையை பறை சாற்றின.
இந்த ஆண்டு இவர்கள் வேறு சில படங்களுக்கு இசை அமைத்ததில் ஏ எம் ராஜா ஜிக்கி குரலில் பிரபலமான 'செந்தாமரையே செந்தேன் நிலவே' புகுந்த வீடு' படத்திற்காக.
'Do Raha' இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'அவள்' படத்தில் கானஸரஸ்வதி சுசீலா அவர்களின் குரலில் ஒரு ஆச்சரியமான பாடல் 'அடிமை நான் ஆணையிடு'. இந்த வகையான பாடல்களை எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் தான் பாடுவார்கள்.
மற்றுமொரு பாடல் இளமையான பாலு குரலில் ஒலித்த 'கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல'
டிவி ராஜு என்பவர் நிறைய தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவர் இசை அமைத்து வெளி வந்து பாடல் சிறப்பாக அமைந்த இரண்டை இப்பொழுது பார்க்கலாம்.
'கனி முத்து பாப்பா' படத்தில் பிரபலமான இந்தி தழுவல் ஆனாலும் 'ராதையின் நெஞ்சமே' மற்றும் 'ராணி யார் குழந்தை' படத்தில் வந்த துள்ளிசை பாடல் பாலு அவர்களின் குரலில்
முந்தைய பதிவில் KVM அவர்கள் 1971இல் சற்றும் இளைப்பாறி இருந்தார் என்று பார்த்தோம். அவர் இந்த ஆண்டில் தன் இசையால் திரும்பி பார்க்க வைத்தார் ஒரு மெகா ஹிட் படம் மூலம். இந்த படம் தெலுங்கில் வெற்றி கொடி கட்டியது. அந்த வெற்றியை தமிழிலும் தொடர்வதற்கு பக்க பலமாக இசை அமைந்ததற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த படம் இசைக்கு மட்டுமில்லாமல் இந்த நடிகருக்கும் ஒரு இமாலய வெற்றி. இந்த படம் இரு முறை மறு வெளியீடு செய்தும் 100 நாட்களை கடந்து சாதனை செய்தது என்பது வேறு எந்த நடிகருக்கும் அமையாதது.
கண்டு பிடித்து விட்டீர்களா ? நடிகர் திலகத்தின் 'வசந்த மாளிகை' தான் :-). சமீபத்தில் 2019 ஆண்டு டிஜிட்டல் வெளியீட்டிலும் 100 நாட்களை கண்டது. இதை நான் கண்கூடாக கண்டேன். இந்த படத்தை சென்னை ஆல்பர்ட் திரை அரங்கில் நூறாவது நாள் அன்று பார்க்க நேர்ந்தது. அந்த தருணங்களை விவரிக்க இயலாது. ஒவ்வொரு பாடல்களின் போது ரசிகர்களின் ஆரவாரத்தில் திரையரங்கே அதிர்ந்தது.
காதல் கதை களம், கவிஞருக்கு கேட்கவா வேண்டும். அடித்து ஆடி இருப்பார்.
கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட
கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட
கண்களின் தண்டனை
காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி
இதே ஆண்டில் அவரை இசை அமைத்த 'அன்னமிட்ட கை ' படத்தில் சுசீலா குரலில் ' 16 வயதினிலே 17 பிள்ளையம்மா' என்ற இனிமையான பாடலும் பிரபலம்.
தேவர் அவர்களின் வெற்றி படமான ' நல்ல நேரம்' பட பாடல்கள் 'ஆகட்டுமடா தம்பி ராஜா' 'ஓடி ஓடி உழைக்கணும்' 'நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ'. பெரும் வெற்றி பெற்றது இப்பட பாடல்கள்.
இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் வந்த 'குறத்தி மகன்' படத்தில் 'குறத்தி வாடி என் குப்பி' எனும் ஒரு ஆட்ட பாடல். சுசீலா அவர்கள் அருமையாக பாடி இருப்பார்.
மெல்லிசை சக்ரவர்த்தி வி குமார் அவர்களின் இசை வெளி வந்த 'வெள்ளி விழா' பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு மெல்லிசை பாடலான 'காதோடு தான் நான் பேசுவேன்' என்ற பாடலையும், சுசீலா அவர்களுக்கு ' நான் சத்தம் போடு தான் பாடுவேன்' என்ற ஆரவார பாடலையும் கொடுத்து புதுமை படைத்தார். இதே படத்தில் ' உனக்கென்ன குறைச்சல்' என்ற பாடலை மெல்லிசை மன்னரை பாட வைத்தார்.
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் கொடுத்த இரு மாபெரும் வெற்றி படங்கள் தேவரின் 'தெய்வம்' மற்றும் ஏ பி நாகராஜன் அவர்களின் 'அகஸ்தியர்'.
'அகஸ்தியர்' - பூவை செங்குட்டுவன் அவர்களின் வரிகளில் டி கே கலா பாடிய 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' நாட்டை ராகத்தி அமைந்த 'வென்றிடுவேன்' பிலஹரி ராகத்தில் அமைந்த எம் ஆர் விஜயா குரலில் 'தலைவா தவப்புதல்வா வருகவே'
தெய்வம் படத்தில் எந்த பாடலை பற்றி சொல்வது எதை விடுவது :-). அட்டகாசமான பாடல்கள். இன்றும் 'மருதமலை மாமணியே' ஈடான பாடல் வரவில்லை. சௌந்தராஜன் சீர்காழி அவர்களுடன் இணையும் 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' பாடலை கேட்டு பக்தி பரவசத்தில் மூழ்காதவர்களே இருக்க முடியாது. அனைத்து பாடல்களையும் எழுதிய கண்ணதாசன் அவர்களை எதனை போற்றினாலும் தகும்.
இன்றும் இப்பாடல்கள் எங்கும் ஒலித்து கொண்டு இருக்கின்றன
அடுத்த பதிவில் 1972ஆம் ஆண்டில் மெல்லிசை மன்னார் என்ன இசை ஆச்சரியங்களை கொடுத்தார் என்பதை பார்ப்போம் !
No comments:
Post a Comment