Friday, May 14, 2021

அன்னக்கிளியும், ராஜாவும், நானும்

 அன்றைய நாட்களில் அது தலைநகரத்தில் வளர்ந்து வரும் ஒரு புறநகர் பகுதி. ஆங்காங்கே நிறைய வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு, கட்டப்படும் இருந்த காலம். உயர்நிலை பள்ளி அதன் அருகில் இருந்ததால் நாங்கள் அங்கே குடிபுக நேர்ந்தது. நான்கு நகர்களை அடக்கிய ஒரு cluster போன்ற அமைப்பு. அங்கு வசித்தவர்கள், வசிக்க வருபவர்கள் எல்லோரும் மத்திய குடும்ப வர்க்கத்தினர் அதுவும் மாநில மற்றும் மத்திய அரசில் பணியாற்றுபவர்களாக  இருந்தனர். 


புதிய சூழ்நிலை புதிய நண்பர்கள் அறிமுகம். அன்றைய கால கட்டத்தில் மைதானத்தில் விளையாட்டு  ஒன்றே கேளிக்கை. மாலை விளையாடி முடிந்த பின், நகரில் நெறய வீடுகள் கட்டமைக்கப்படுவதனால், ஆங்காங்கே அதற்கான மணல் கொட்டி வைக்கப்ட்டு இருக்கும். அதில் அமர்ந்து பல கதைகள், சில செல்ல சண்டைகள் எல்லாம். விளையாட்டை தவிர்த்து அந்த பதின்ம வயதில் ஈர்க்கப்பட்ட இன்னொரு விஷயம், சினிமா. எங்கள் குழுவில் சினிமாவை இசை மூலம் ரசிக்க முடிந்தது ஒரு வரம். நிறைய நண்பர்கள், சிலர் என்னை விட வயதில் மூத்தவர்கள் இசையை பற்றி பேசும் பொழுது ஆர்வம் அதிகமாகும் . ஒவ்வொரு படத்தின் பாடல்களை பற்றி அளவளாவி மகிழ்ந்த தருணங்கள். 


இதே நாள் (14 மே  1976 )  45 வருடங்களுக்கு முன்பு  தமிழ் திரையுலகில் ஒரு புதிய இசை அலை உருவானது. 'அன்னக்கிளி' வெளியான நாள். இன்றும் மறக்க முடியாத கால கட்டம். பாடல்களை கேட்க ஒரே வாய்ப்பு வானொலி மட்டுமே. தவிர்த்து நாங்கள் இருந்த குடியுருப்பில் 'குடியிருப்போர் நல  சங்கம்' நடத்தும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில், கூம்பு வடிவ ஸ்பீக்கர் அமைத்து பாடல்களை ஒளி பரப்புவார்கள். அந்த நாட்களுக்காக காத்திருப்போம். முக்கியமான விழா நிகழ்வுகள் முடிந்த பின்னர் அந்த சவுண்ட் சர்வீஸ் மேஜையில் அமர்ந்து 'அன்னக்கிளி, கவிக்குயில், பத்ரகாளி, புவனா ஒரு கேள்வி குறி, காற்றினிலே வரும் கீதம்' போன்ற இசை தட்டுக்களை தேய தேய ஒளி பரப்பி மகிழ்வோம்.

'ஒரு காதல் தேவதை' 'நான் பேச வந்தேன்' 'ஒரு காதல் தேவதை இரு கண்ணில் பூமழை' 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்' 'பூந்தென்றலே' 'தேவி செந்தூர கோலம்' 'தாலாட்டு பிள்ளை என்னை தாலாட்டு' போன்ற எத்தனையோ சாக வரம் பெற்ற  பாடல்கள். ராஜாவின் ஆரம்ப கால பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் எத்தனை  படங்கள் இசை அமைத்து இருந்தாலும் என் மனதில் ஆழ பதிந்தது அவர் ஆரம்பித்த அன்னக்கிளி முதல் 70களின் மற்றும் ஆரம்ப 80களின் பாடல்கள் தான். 30 வருடங்களுக்கு மேல் ஆனா பிறகும் அவைகளை விட்டு என்னால் வெளி வர முடியவில்லை. 

என்னை பொறுத்தவரை அவர் எனக்கு வேண்டிய இசையை அவருடைய முதல் 100-150 படங்களிலேயே கொடுத்து விட்டார் . இன்னமும் அவைகளை திரும்பி சென்று கேட்டு கொண்டு இருக்கின்றேன்.